ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்க தயாராகும் சீனா

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்பதற்கான அங்கீகாரத்தை டிரம்ப்பின் அரசு, நேற்று ரத்து செய்துள்ளது.

May 23, 2025 - 16:57
ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்க தயாராகும் சீனா

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்பதற்கான அங்கீகாரத்தை டிரம்ப்பின் அரசு, நேற்று ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் சர்வதேச அங்கீகாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என சீன அரசு விமர்சித்துள்ளது. 
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 6,703 வெளிநாட்டு மாணவர்கள் இணைந்துள்ளனர்.

அதில், 1,203 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனவும் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹார்வர்டிலிருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது பல்கலைக்கழகத்தில் இணைந்து அவர்களது கல்வியைத் தொடரலாம் என்று ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துக்கொடுப்பதுடன் அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படும் எனவும் அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்கள் அந்நாட்டு அரசினால் தொடர் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க விமான நிலையங்களில் தரையிறங்கிய சீன மாணவர்கள் பலரை விசாரித்து, தங்களது தாயகத்துக்கு மீண்டும் திருப்பி அனுப்பியதாக சீன வெளியுறவுத் துறை சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியிருந்தது.

இதுபோன்ற, தொடர் நெருக்கடிகளினால், பெரும்பாலான சீன மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் கல்வி நிறுவனங்களின் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!